Wednesday 16 September 2015

விரல் தீண்டிடும் வர்ணங்கள்

உடைத்து வீசிய
கனவின் துண்டுகளில்
ஒன்றினைப் பற்றி
கண்ணாடி சில்லுகளில்
கால் பதித்த தருணம்

மலர் மாலை கொண்ட
மங்கையவள் மறுதலிப்பு
தொலைக்கப் பட்டது
மூச்சுக்களின் புழுக்கத்தை
இறுக்கிய மூன்று முடிச்சில்!

அவளும்
காற்றை வாசித்தாள்
துழாவிய கைகளுக்கு
அகப்பட்ட இருளின்
ஏகாந்தத்தில்!

இருளும் பகலும்
சங்கமிப்பதில்லை
பொழுதுகள்
விற்றுத் தீர்த்த
சாவின் மயக்கத்தில்..

கை ரேகைகள்
காத்திடும் லட்சியத்
தீற்றல்கள்
வியர்வைத் துளிகளின்
வழியே சுவாசம் கொண்டு!

பிரிந்து ஆடிய
குழல் கற்றையில்
இழை இழையாய்
ஆயிரமாயிரம்
வானவில்கள்
வர்ணங்களின் சிறையில் ..

நொடிகளின் மரணம்
சுகித்திடாத மூச்சுக்
காற்றின் பிறப்பு

அவிழ மறுக்கும்
வெற்றுக் கட்டுகளின்
இறுதி மோட்சம்
ஒட்டடை சூழ்ந்த
ஆழ்ந்த நித்திரையில் !

வெளிச்சம் மறைத்த
மின்மினி ஒன்று
சொந்தம் கொண்டாடிய
காரிருளில்

ராகங்கள் தீண்டாத
கானக் குயில்களின்
அனு பல்லவிகளில்

அவள் மெல்ல
உயிர்ப்பித்திருந்தாள்!!

No comments:

Post a Comment